முனைவர் நா. பாலசுப்பிரமணியன்,
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
தமிழ் உயராய்வுத் துறை,
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி,
திருப்பூர் – 641 60296297 34137
முன்னுரை
சங்க இலக்கியத்தில் நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கைப் பரவலாகக் காணமுடிகிறது. சங்கப்பாடல்கள் பல உதிரிப்பாடல்களின் தொகுப்பேயாகும். ஒவ்வொரு பாடலுமே ஒரு நாடக வடிவில் படைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. அதிகமான பாடல்களில் தலைமக்களோடு இணைந்து பயணிப்பவர்களாகக் கலைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர். இக்கலைஞர்கள் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய நாட்டுப்புறக் கலைகளை வளர்த்துள்ளனர். இவர்கள் நிகழ்த்திய கலைகளில் முக்கியமானதாக அறியப்படுவது குரவைக் கூத்தாகும். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் அக்கூத்து குறித்து இக்கட்டுரை ஆய்கிறது.
இலக்கியத்தில் கலைகள்
மனிதனை மாமனிதனாக்க எழுந்தவைகளே இலக்கியங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த நிகழ்வுகளின் வெளிப்பாடே இலக்கியங்கள். மனிதர்களின் வாழ்வும் பொழுதுபோக்கு அம்சங்களும் இலக்கியங்களாக மிளிர்கின்றன. தற்காலத்தைப் போலவே சங்க இலக்கியக் காலத்திலும் பல்வேறு தரப்பட்ட மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் சிலர் இலக்கிய மாந்தர்களாகக் காட்டப்படுகின்றனர். அவர்களுக்கு உதவுபவர்களாகச் சிலர் காட்டப்படுகின்றனர். அவ்வாறே, மகிழ்விப்பதற்காகவும், பொழுதுபோக்குவதற்காகவும் சிலர் காட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களையும் மன்னர்களையும் மகிழ்வித்துள்ளனர். குறிப்பாக, பாங்கர், பாணர், கூத்தர், பொருநர், விறலியர் எனப் பலவாறாக அவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் ஆண்களும் பெண்களுமாகத் தனித்தும் இணைந்தும் கலைகளை வளர்த்துள்ளனர்.
குரவைக் கூத்து
நடனம் அல்லது ஆடல் என்பது மனிதனின் இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்று. இதனைக் கூத்து என்றும் அழைப்பர். தமிழ் இலக்கியப்பரப்பில் அதிகமாகக் கூறப்படும் ஆடல் வடிவம் குரவைக் கூத்தாகும். குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து, வெறியாட்டு, துடிக்கூத்து, முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, வள்ளிக்கூத்து, வள்ளைப்பாட்டு போன்ற பல கூத்துகள் குறித்து சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறியமுடிகிறது.
குரவை அயர்தல், குரவை தூங்குதல், குரவை முனைதல், குரவை நிற்றல், குரவை தழுவுதல், குரவையோடு ஒலித்தல் எனப் பல பெயர்களில் குரவைக் கூத்தானது இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. சமயச் சடங்குகள், விழாக்கள், போர் வெற்றிகள் போன்ற தருணங்களிலும்,ஜ் சமூகத்தின் மகிழ்ச்சி வெளிப்பாடுகளிலும் இக்கூத்து ஆடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. குறிஞ்சி நிலப்பகுதியில் அதிகமாக இக்கூத்து ஆடப்பட்டதால் இதனை ‘மலை நடனம்’ என்றும் அழைப்பர்.
‘குரவைக் கூத்து என்பது கை கோர்த்தாடல்’ என திவாகர நிகண்டு கூறுகிறது. குரவைக்கூத்து என்பது பெண்களோடு ஆண்களும் இணைந்து ஆடும் ஒருவகை நடனமாகும். குரவையாட்டம் என்றும் குரவைக் கூத்து என்றும் இது அழைக்கப்படுகிறது. குரவைக்கூத்தில் முதலில் பெண்கள் ஆடுவர். பின்னர் ஆண்களும் இணைந்து கொள்வர். பொழுதுபோக்காகக் குரவையாடும் வழக்கம் இருந்திருக்கிறது. குரவைக்கூத்தில் கள்ளுண்ணல் காணப்படுகிறது. பெண்களும் கள்ளுண்டு ஆடுவர். மதுரைக்காஞ்சி இதனைப் பின்வருமாறு விளக்குகிறது.
“....................
சீர்மிகுநெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ
மன்றுதொறும் நின்ற குரவை
சேரிதொறும் உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறு வேறு கம்பலைவெறி கொள்பு மயங்கி
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்பு எழுந்தாங்கு.....” - மதுரைக்காஞ்சி, பா. வரி. 614 - 619
அதாவது, முருகனை வழிபட்டு, மகளிர் தம்முள் தழுவிக் கைகோர்த்து, மன்றங்கள்தோறும் குரவைக் கூத்து ஆட, குடியிருப்புகள்தோறும் பாட்டும் கூத்தும் வெவ்வேறு ஒலிகளும் எழ நன்னனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
குறிஞ்சிநிலக் குரவை
மலை மக்களாகிய குறவர்கள், தங்கள் வேலைகளெல்லாம் முடிந்த பின்னர், மாலை நோத்தில், தங்கள் பெண்டிரோடு கள்ளுண்டு குரவையாடுவர். இதனை,
“நறவு நாள் செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறுபறை கறங்கக் கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை” - மலைபடுகடாம், பா.வ.320 - 322
எள்று மலைபடுகடாம் பாடல்வரிகள் விளக்குகின்றன.
பகற்குறியில் தலைவியைச் சந்தித்துச் செல்லும் தலைவனை, தோழி தடுத்து எங்கள் மலை ஊரில்தங்கி, நாங்கள் ஆடும் குரவைக் கூத்தினைக் கண்டு செல்க எனப் பணிக்கிறாள். இதனை நற்றிணைப் பாடல்,
“வேங்கை முன்றில் குரவையும் கண்டே.....” - நற்றிணை, பா.276. 10
என்று குறிப்பிடுகிறது.
முல்லை நிலத்துக் குரவை
முல்லை நிலத்து மக்கள் ஆயர் குலத்தவர்களாகப் பெரும்பாலும் இருப்பர். அவர்களின் பொழுது போக்கும் வீர விளையாட்டும் ஏறு தழுவுதல் ஆகும். ஏறு தழுவி, காளையை அடக்கிய வீரர்களைப் பெண்கள் புகழ்ந்து பாடுவர். அத்துடன் தங்கள் மன்னனின் பெருமைகளையும் பாடுவர். இப்பாடல் குரவைக் கூத்தாக அமையும்.
“பண்மை இன்சீர்க் குரவையுள்.....” - கலித்தொகை, பா.102. 35
சிறுகுடி மன்றத்தில் பண்ணும் தாளமும் பின்னணியாக விளங்க, குரவைக் கூத்து நிகழ்கிறது. ஏறு தழுவிய காளையரின் வீரத்தை நினைத்தும், தலைவியின் மெல்லிய தோளைப் பாராட்டியும் பாடி ஆடுவர். இதனை,
“குரவை தழீஇ, யாம் பரபுளி பாடி....” – கலித்தொகை, பா.103. 74
என்று, மன்னனைப் புகழ்ந்து பாடிக் குரவையாடினர் பெண்கள் என்பதாகக் கலித்தொகை விளக்குகிறது.
மருத நிலத்துக் குரவை
வயலும் வயல் சார்ந்த பகுதியுமான மருத நிலம் வளமிக்கதாக விளங்கும். வயல்வெளிகளில் வேலை செய்யும் உழத்தியர்களும், பயிர்களைக் காவல் காக்கும் பெண்களும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவர். அவ்வாறே குரவையும் ஆடுவர் என்பதை,
குறும்பல் யாணர்க் குரவை அயரும்......” – பதிற்றுப்பத்து. பா. 73. 10 – 11
என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.
மருதநிலம் வளமிக்க வயல்வெளிகளை உடையது. அங்கு நாரைகளை விரட்டும் பெண்கள் தம் அணிகலன்களை அகற்றாமல், இரவும் பகலும் புதுப்புது வகைகளில் குரவையாடுவர்.
குரவைக்கூத்தோடு தொடர்புடைய மற்றொரு கூத்து துணங்கையாட்டம் ஆகும். பொதுவாக ஆயர்குலப் பெண்கள் குரவை, துணங்கையாட்டம் ஆடினாலும், அவர்களில் ஆடற்கலையில் வல்ல பெண்களும் இருந்துள்ளனர் என்பதைப் பின்வரும் குறுந்தொகைப் பாடல் வழி அறிய முடிகிறது.
“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன், மாண்தக் கோனை,
யானும்ஓர் ஆடுகள மகளே, ...
................
பீடுகெழு குரிசிலும்ஓர் ஆடுகள மகனே.” – குறுந்தொகை, பா. 31
தான் காதல் கொண்ட தலைவனை, தலைவி எங்கும் தேடுகிறாள். வீரர்கள் குழுமியிருக்கும் விழாக்களிலும், பெண்கள் தழுவித் தம்முள் கூடியாடும் துணங்கைக் கூத்துகளிலும் எங்கும் தன் தலைவனைக் காணவில்லை. அவளும் ஆடற்கலை அறிந்த பெண்ணேயாவாள். அவளது தலைவனைப் பெற்றவளும் ஆடற்கலை வல்ல ஆடுகள மகளேயாவாள் என்று தலைவி உரைக்கிறாள்.
நெய்தல் நிலத்துக் குரவை
பரதவர்கள் வாழும் கடல் பகுதியிலும் குரவைக்கூத்து ஆடப்படுவதுண்டு. குறிஞ்சி, முல்லை நிலங்களில் திணை காத்தல் போலவே, நெய்தல் பகுதியில் உலரும் மீனைக் காத்தலையும் பெண்கள் செய்திருக்கின்றனர். அந்நேரத்தில் பெண்கள் குரவையாடுவர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போதும், கடற்கரை விழாக்களின்போதும் அவர்கள் குரவையாடுவர். பூம்புகார்க் கடற்கரையில் கானல்வரிப் பாட்டு நடைபெற்றதாகச் சிலப்பதிகாரம் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
“கொண்டல் இருமணல் குரவை முனையின்
வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி.....” - அகநானூறு, பா. 20. 7 – 8
கடற்கரை மணலில் புன்னைமர நிழலில் காயவைத்த மீன் வற்றலைத் தின்ன வரும் பறவைகளை விரட்டியும், விளையாட்டாக நண்டு வளைகளைத் தோண்டியும், கொன்றை மரக் கிளைகளில் கட்டிய கயிற்றால் ஆன ஊஞ்சலில் ஆடியும், தோழியரோடு குரவைக் கூத்து ஆடியும், அது வெறுக்கிறபோது, கடல்நீரில் குதித்துத் தோழியரோடு நீராடியும் கடற்கரைச் சோலையில் தலைவனோடு தங்கி இருந்தோம் என்று தலைவி, தோழியிடம் தன் காதல் பற்றிக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பரதவர் மது உண்டு மகளிருடன் குரவைக்கூத்து ஆடினர். நுங்கின் நீரும், கருப்பஞ்சாறும், இளநீருடன் கலந்து உண்டு, மகளிருடன் கடல்நீரில் பாய்ந்து ஆடி மகிழ்ந்தனர் எனப் புறநானூற்றுப் பாடல் ( 24 ) குறிப்பிடுகிறது.
மூங்கில் குழலிலிருந்த மதுவை உண்டு குறவர்கள் குரவை ஆடினர் எனப் பின்வரும் பாடலடிகள் காட்டுகின்றன.
“குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்குஅமைப் பழனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்......” - புறநானூறு, பா. 129
என்பது அப்பாடலாகும்.
பாலைநிலத்துக் குரவை
பாலை நிலத்தில் மறவர்கள், வழிப்பறி செய்பவர்கள் வாழும் ஊர்கள் காணப்படுகின்றன. அவர்கள் தங்கள் தொழில் முடிந்து, குடியிருப்புகளுக்குத் திரும்புவர். அங்கு குரவை உள்ளிட்ட கூத்துகள் நடைபெறுவதுண்டு.
“குலாஅ வல்வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர், பூசா வாயர்,
ஒராஅ உருள்துடி குடுமிக் குராலொடு.....” – அகநானூறு. பா. 265. 17 – 19
தலைவன் பொருள்வயின் பிரிந்தபோது, அவன் சென்ற பாலைநிலத்தின் கொடுமை குறித்து, தோழியிடம் தலைவி கூறுகிறாள். பாலைநிலத்தில் உள்ள கொள்ளையர்கள் வேட்டையாடிய விலங்குகளை நெருப்பில் சுட்டு உண்பர். தாகத்திற்குக் கள்ளினைக் குடிப்பர். புலால் நாற்றம் வீசும் கையையும் வாயையும் கழுவமாட்டார்கள். தம் சிற்றூர்க்குச் சென்று, கோட்டானின் ஓசையோடு இயைந்து போகுமளவிற்கு ஓசை எழுப்பி, மகிழ்ச்சியுடன் கூத்தாடுவர். அத்தகைய மறவர்கள் வாழும் குடியிருப்புகள் நிறைந்தது பாலை நிலம் எனத் தலைவி கூறுவதாக அகநானூற்றுப் பாடல் கூறுகிறது. இப்பாடல் பாலை நில மறவர்கள் குரவைக் கூத்தாடும் முறையைக் குறிப்பிடுகிறது.
போர்க்களக் குரவை
போர்ப் பாசறையில் சினத்தோடு வீரர்கள் ஆடிய குரவைக்கூத்தின் ஒலி கடலொலி போலக் கிளர்ந்தொலித்தது என்பதை,
“ ......................
சினமாந்தர் வெறிக்குரவை
ஓத நீரில் பெயர்பு பொங்க........” - புறநானூறு, பா. 22
எனப் புறநானூறு கூறுகிறது.
“பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி....” – பதிற்றுப்பத்து, பா. 45.12
பிணங்கள் குவிந்திருக்கும் இடங்களில் விரர்கள் துணங்கை ஆடுவர் எனப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.
“துணங்கை ஆடிய வலம்படு கோமான்” – பதிற்றுப்பத்து, பா. 57.4
போர்க்களத்தில் வெற்றிபெற்று வீரர்களோடு துணங்கைக் கூத்து ஆடினான் சேரவேந்தன் எனப் பதிற்றுப்பத்து கூறுகிறது. துணங்கைக்கூத்து பெண்களாலும், ஆண்களாலும், போர் வீரர்களாலும், அரசர்களாலும் ஆடப்பட்டுள்ளது. போர்க்களத்தில் வீரர்களும் மன்னர்களும் கூத்துகள் ஆடுவர் என்பதைச் சங்கப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.
முடிவுரை
மக்கள் கலையாக உள்ள நாட்டுப்புறக் கலை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல்வேறு பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு இன்றளவும் நிலைபெற்று நிற்கிறது. சங்க இலக்கியம் செவ்வியல் இலக்கியமாக விளங்கினாலும், அதில் நாட்டுப்புறச்சாயலும் காணப்படுகிறது. இலக்கியத்தில் தலைமக்களோடு இணைந்து செல்பவர்களாகக் காட்டப்படும் துணைமாந்தர்கள் நாட்டுப்புறக் கலை வடிவங்களான கூத்து, நாடகம் போன்றவற்றை வளர்த்துள்ளனர். சங்க இலக்கியத்தில் குரவைக் கூத்து அதிகமாக இடம்பெறுவதைச் சங்கப் பாடல்கள் வழி அறியமுடிகிறது. இன்றளவும் இக்கூத்துமுறை ஒயிலாட்டம், கும்மி, கோலாட்டமாகப் பல்வேறு வடிவங்களில் ஆடப்பட்டு வருகிறது. வெறியாட்டு சாமியாடலாகவும், வள்ளிக்கூத்து தெரு நாடகமாகவும் இன்று வடிவம் பெற்றுக் காணப்படுகிறது.
துணைநூற்பட்டியல்
- இராம சுவாமி, மு. தமிழ்ச்சமூகத்தில் கூத்து - நாடகம் ஒரு தொடர் விவாதத்தை நோக்கி, செம்பு படைப்பகம், மதுரை, 2008.
- சிவத்தம்பி, கா. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம், குமரன் புத்தக இல்லம், சென்னை, 2004.
- சுப்பிரமணியன், ச. வே., சங்க இலக்கியம் எட்டுத்தொகை மூலமும் உரையும், தொகுதி -1, 2, 3, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2010.