முனைவர் ம.அருள்தாஸ்,
இணைபேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
பூம்புகார்க் கல்லூரி(தன்னாட்சி),
மேலையூர்-609107,
மயிலாடுதுறை மாவட்டம்,
பேச: 9790678071,
மின்னஞ்சல்: draruldoss2007@gmail.com
ஆய்வுச்சுருக்கம்
அகத்தின் கண் மறைந்தும், புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்குதல் பெறும் வலிய சக்தியே காதல் ஆகும். ஆண், என்ற உறவுகளின் வழியாகவும், அவற்றின் வாழ்வுக்கும், வளத்திற்கும் அடிப்படையாகவும் இக்காதல் விளங்குவதைக் காணலாம். காதல் உணர்வால் ஆண்களும், பெண்களும் கவரப்பட்டிருக்கின்றனர். காதல் உணர்வு இல்லாத மனிதர்களையே உலகில் காணவியலாது. மனித இனம் தோன்றிய அன்றே இக்காதல் உணர்வும் தோன்றியிருக்க வேண்டும். தமிழர்கள் காதலையும், வீரத்தையும் இரு கண்களாக போற்றிக் கருதுகின்றனர். இந்நிலையில் தான் இலக்கியங்களை அக இலக்கியம் என்றும், புற இலக்கியம் என்றும் இருவகையாக பிரித்திருக்கின்றனர். ஆண், பெண், இருவரிடையே தோன்றும் காதல் உணர்வுகளை நெறிப்படுத்தவும், முறைப்படுத்தவும், பழந்தமிழர்கள் மிகவும் நேர்த்தியான முறைகளைப் பின்பற்றியுள்ளார்கள்.
முன்னுரை
நாட்டுப்புறப் பாடல்களில் அன்புக் காதலும் (இருபாற்காதல்) ஒருதலைக் காதலும் (பொருந்தாக் காதல்) பொருண்மையாக அமைந்துள்ளதை காணமுடிகிறது. அன்புக்காதலைப் பொறுத்தவரை, காதல் வெற்றிகள் பொதுவாகப் பாடலில் இடம்பெறவில்லை. காதல் தோல்விகளே பல பாடல்களில் பொருண்மையாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. சமூகம் கட்டமைப்பில் காதல் வெற்றி பெறுவது என்பது கடினமாகும். நாட்டுப்புறப்பாடல்களில் காதலின் சோகம், வேதனை, தவிப்பு, ஏக்கம், பிரிவு போன்ற எண்ணற்றவைகளையே காணமுடிகிறது. நாட்டுப்புற மக்களின் மனவுணர்வுகளையும், அதன் வேதனைகளையும், ஏக்கங்களையும், பட்டியலிட்டுப் பாக்கும் போது உயர்வான எண்ணங்களின் பிம்பங்களே தோன்றுகிறது. கலப்படமில்லாத மனித வார்ப்புகள் இங்கே கவனம் மிக்கதாக தென்படுகிறது. ஆண், பெண், இருவரின் சமகால நிகழ்வுகளை, அதன் அரங்கேற்றங்களை முன் வைக்கின்ற இக்காதல் இசைப் பாடல்கள் சூழ்நிலைகளையும், அதன் சாரங்களையும் அன்பின் வழியே சென்று கொண்டிருக்கின்றன, என காதல் இசைப் பாடல்களின் மனவுணர்கள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
- நாட்டுப்புறப்பாடல்களில் காதல்
காதலர் இருவர், ஒருவர் மற்றொருவரிடம் கொள்ளும் ஈடுபாடு, பெரும்பான்மையும் மேனி அழகின் அடிப்படையிலேயே நிகழ்கிறது எனலாம். பெண்ணின் கூந்தல், நிறம், ஆடை, அணிகலன்கள் உடல் உறுப்புகள் இவை எல்லாம் காளையரின் உள்ளத்தைக் கவர்ந்து இழுக்கும் காரணங்களே எனக் கூறலாம். ஓர் இளம் பெண்ணின் கன்னங்கரிய கூந்தல் காளை ஒருவனைக் கவர்ந்தது. அதன் நீளம், அதை முடிந்து கொண்டை போட்டிருக்கும் அழகு, கொண்டை வனப்பு, ஆளை மிரட்டும் தன்மை ஆகியன இந்த இளையவனின் கருத்தில் நிறைந்து காணப்படுகின்றன. இதன் மனவுணர்வுகள் வெளிப்படும் போது, இதனை,
"ஆலம் விழுது போல
அந்த புள்ள தலைமயிறு
தூக்கி முடிச்சாளே
தூக்கனாங் கூடுபோல"
ஆலம் விழுதுகளை
அள்ளிக் கொண்டை போட்டவளே – அடி
ஆத்தாடி இந்தக் கொண்டை
ஆரைக் குடிகெடுக்க
வாழையடி உன் கூந்தல்" 1
என்ற இப்பாடலின் மனவுணர்வுகள், வாழ்வியலோடு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
"எண்ணெய்த் தலை அழகி
எழுந்தாணி மூக்கழகி
கண்ணைப் பறிக்குதடி
கட்டழகி உன் அழகு"
"நடையா நடை அழகி
நாதாங்கி காதழகி
கோயில் சிலை அழகி
சொல்லுதடி உன் ஆசை"
"எண்ணெய் தலை அழகி
இருந்தோளும் பொன்னழகி
திரும்பி நடக்கையிலே
சீவன் பறி போகுதடி"
"இடுப்புச் சிறுத்தவளே
என் குணத்துக்கு ஏற்றவளே
நடையும் சிறுத்தவளே
நான் வாரேன் உன்னை தேடி" 2
என்ற இப்பாடலின் அர்த்தமுள்ள வரிகள் யாவும் பெண்ணின் அழகைக் கிண்டலும், கேலியுமாக படம்பிடித்துக் காட்டுகின்றது. நாட்டுப்புற மக்களின் மன அழகு, நடை ஓட்டம், கற்பனையோட்டம், இதனைக் கொண்டே நன்கு அளந்து அறிந்திட முடியும். காரணம் தன் மனதில் பட்டதை, பட்டவர்த்தனமாகக் கூறிமுடிப்பார். காலத்தின் சூழலில் இவர்களின் கண்ணோட்டம் வாழ்வியல் நடைமுறைக்கு ஒத்துப் போவதாகவே அமைந்திருக்கிறது. இந்நடையோட்டப் பாடல்கள் இவ்வொவ்வொன்றும் ஆழ்மனதில் அளித்திருக்கும் எண்ணங்களை அர்த்தமுடையதாக் காட்டுகிறது.
- காதலின் மனவுணர்வுகள்
காதலுக்கான முன்னேற்றங்கள் அத்தனைகளிலும் ஆண், பெண் இருவர் சார்ந்த உலக உண்மைகள் தென்படுகின்றன. உண்மையான உறவுகள் மற்றும், அதன் கோட்பாடுகள் எல்லாம் இங்கே சமமான சூழ்நிலையில் எல்லோருக்கும் பொதுவாக உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக மண்ணின் மைந்தர்கள் மையல் கொள்ளும் ஒப்பற்ற அழகிகளின் கலைக் கூடங்கள் எல்லாம் கற்பனையின் விளிம்புகளில் காட்சியளிக்கின்றன. கற்பனைகள் யாவும் கலப்படமின்றி உண்மைகளை எடுத்துகாட்டுகின்றன. ஒரு ஆண், பெண் இருவரின் ஒப்புதல்களை அவர்கள் எண்ணங்களின் சாரங்களை சமநிலைப்படுத்தும் நோக்கில் ஆராயும் போது உண்மையான எதார்த்தங்கள் வெளிப்படுகின்றன.
- காதல் பாடலில் வாழ்வியல் நடைமுறைகள்
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் அழுத்தமும், ஆழமும் கொண்ட அன்பு நிலைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு நிலைப்பெற்றிருப்பதை காதல் என்கிறோம். கிளர்ந்து எழுகின்ற பருவ உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, அவ்வுணர்ச்சியலைகள் ஓய்ந்தவுடன், ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து செல்வதைக் காதல் என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் காதலின் முன்னேற்றங்களை எடுத்து இயம்ப இயலாது. உயர்ந்த ஆணின் மனதையும், பெண்ணின் இரக்க குணத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் இங்கே ஆழ்கடலின் அமைதி தென்படுகின்றது. குறிப்பிட்ட வாழ்க்கையோடு, எதார்த்தங்களின் வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கையில் காதலின் ஒற்றுமை உணர்வுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. காதலுக்கும், வாழ்க்கைக்குமான கருத்துக் கோட்பாடுகள் இங்கே பலமாகச் சித்தரிக்கப்படுகின்றன.
காதலையும், காமத்தையும் இணைவுப்படுத்திப் பார்க்கையில் ஒற்றுமையின் குணங்கள் மிகுதியாகத்தென்படுகின்றன. இருந்தாலும் இதில் பொருள் வேறுபாடுகள் ஏதுமில்லை. இக்காதல் என்பது திருமணம் ஆகாத ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலும் தோன்றலாம். திருமணம் ஆன கணவன், மனைவியிடத்தும் தோன்றலாம். மிகுதியான எண்ணங்களின் வெளிப்பாடுகள் எல்லாம் இங்கே காதலால், அதன் பொருளாய் தென்பட்டு வருகின்றன. சங்க இலக்கியக் காலக்கட்டத்தில் தன் காதலன் மீது கொண்டிருந்த அன்பின் பெருமையிiன்
"நிலத்திலும் பெரிதே வானினும் உயந்தன்று
நீரிலும் ஆர்அளவின்றே சாரல்
கரும்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொரு நட்பே"
தேவகுலத்தார் (குறுந்தொகை – பா.3)
என்று கூறிடும் இப்பாடலில் இவளோ, இன்னும் திருமணம் ஆகாதவள் இவள். நிலத்தினைக் காட்டிலும், பரந்ததாகவும், வானத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவும், நீரைக் காட்டிலும் ஆழமானதாகவும், மலையைக்காட்டிலும் திண்ணியதாகவும் கொண்ட காதலைத் தன் காதலன் மீது கொண்டிருக்கிறாள் என்பதை எண்ணும் போது நமக்குத் காதல் என்னும் சொல்லிற்குரியப் பொருளும் புரிகின்றது. இவன் கொண்டிருந்த காதலின் அழுத்தமும் தெரிகின்றது. இத்தகையை பாடலின் பொருள்கள் யாவும் வாழ்வியலோடு ஒத்து வந்த காதலையும், காதலோடு ஒத்து வருகின்ற வாழ்க்கையையும், இணைவுப்படுத்திக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
- தமிழர் கண்ட காதலின் கிராமிய மணம்
மனிதன் பல்வேறு இடங்களிலும், பல்வேறு நிகழ்வுகளில் மனிதனாகப் பிறந்து, மாபெரும் கூட்டமாக வளர்ந்து வாழ்வியலை மேற்கொண்டிருக்கின்றான். இதன் வாயிலாக வெற்றி வாய்ப்புக்கள் அனைத்தையும் பெற்றிருக்கிறான். இவ்வெற்றியின் நினைவாக விழா எடுத்து, மாடு, வீடு, பொன், பொருள் எனப்பலவற்றையும் தன் உடமைகளாகப் பெற்று மகிழ்ந்திருக்கின்றான். ஆனால் இவற்றில் காணாத அத்தனையும் பெண்ணாசை என்ற ஒரு இடத்தில் அழகுப் பார்த்து கொள்கிறான். காதல் இன்பத்தை முழுமையாக உண்மைப்படுத்தியவர்கள் தமிழர்கள். இவர்கள் பெண்களை வெறுக்காமல் பேய் என துரத்தாமல், சிற்றின்பம் என நினையாமல் இக்காதலைப் போற்றி வந்துள்ளனர்.
அறம்பொருள், இன்பம், வீடு என்னும் நான்குமே மக்கள் அடையும் உறுதிப்பொருள் எனக் கண்டனர். அவற்றுள் கற்புள்ள மனைவியோடு, நடத்தும் காதல் வாழ்வே சிறந்தது எனக் கொண்டனர். காதல் வாழ்வே அவர்கள் உயிர் நாடியாக இருந்தது. இதனை, "காதல் உடலுக்கு நல்லது; உள்ளத்துக்கு நல்லது; ஊருக்கு நல்லது; உலகத்துக்கே நல்லதுஸ்ரீ அந்த நல்ல காதல் எது? என்பதை ஆராய்வது தான் இக்கிராமிய பண்பாட்டு உணர்வாகும்.
"ஆராயப்பட்ட உண்மைத் தன்மைகள் யாவும் உள்ள ஒழுக்கம் உடைய ஆனும், பெண்ணும் உலகை மதித்து நடப்பர். தன் உடம்மை மதிப்பர், கொண்ட மனத்தை மதிப்பர் ஒருவர் ஒருவர் தம் காமநாடிகளைப் புரிந்து கொண்டாடுபவர், காமக்குறைவு, கடமைக்குறைவாம் என்று உணர்வர். மெய்யின்பம் அனைத்தையும் உயிரின்பம் என்று நினைத்துப் போற்றி ஒழுகுவர். அகத்தினை வாழ்க்கையை அன்புத் திணை வாழ்க்கையைக் காண்பர். அகத்தினை காதல் என்பது வாழ்வின் மேன்மையைப் புலப்படுத்தவல்லது" 3 என்று கூறுகிறார் வ.சுப.மாணிக்கனார்.
பெண்ணானவன் நிலமானதும் ஆணானவன் மழையானதும் தமிழ்க் காதலே ஆகும். இத்தமிழ்க் காதலர் இருவர் தம்மில் வேற்றுமையற்று உளம் கலந்து காதல் இன்பத்தில் ஈடுபட்டதை அழகு நயத்துடன் இங்கே கூறலாம். இதில் உள்ள மனவுணர்வுகள் யாவும், எல்லோருக்குமான செய்தியை தெளிவாகக் கூறுகின்றன. எங்கேயோ பிறந்த வான் மழை, மலை நீரும், செம்புலமும் கலந்து செம்புலப்பெயல் நீராக் காட்சி அளிக்கின்றன. இதைத் தமிழர்க் காதலின் தடயம் என்றும் வரையறுக்கலாம். இதனை குறுந்தொகைப் பாடலுடன் அடித்தளங்களைக் காணலாகும் போது,
"யாயும் ஞாயும் யாரா கியரோ
ளந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்விழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!" 4
தாய் தந்தையர் யார் என்று தெரியாது. காதலர் இருவரும் முன், பின் கண்டதில்லை. எனினும் இன்று சோலையில் முதன் முதலில் கண்டவுடனே செந்நிலத்தில் பெய்த மழை நீர் அம்மண்ணுடன் கலந்து செந்நிலம் ஆவது போல இருவர் உள்ளங்களும் அன்பினால், காதலால் இணைந்தன என்பது அந்நாளில் சாதி, மத, இன, பேதம் பாராமல் காதல் கொண்ட நிலையை எடுத்துரைக்கிறது.
- காதல் தூதில் மனவுணர்வுகள்
ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தியைத் தூது என்பர். சங்ககாலம் முதலே தூது அனுப்பும் வழக்கம் இருந்து வருகின்றது. தூது இலக்கியம் என்று தமிழ் இலக்கியத்தில் ஒரு வகையுமுன்டு. வில்லிபாரதத்தில் 'கிருட்டினம் தூதுச் சுருக்கம்' என்ற பகுதி கண்ணன் சென்றமையினைத் தெரிவிக்கும். இராமாயணத்தில் 'அனுமன்' சிறந்த தூதுவனாகச் செயற்பட காணலாம்.
"இறுதிப் பயப்பினும் எஞ்சா நிறைவற்
குறுதி பயப்பதாம் தூது" 5
என்று வள்ளுவப் பெருந்தகையும் தூது பற்றி குறிப்பிடுகின்றார். இத்தகைய சிறப்பு வாய்ந்த தூது, தலைவன் தலைவிக்கு இடையே நிகழும் காதற் பாடலை, பிரிவைப் போக்க தென்றல், நீர், ஆகாயம், போன்ற பலவற்றைத் தூதாக அனுப்பவர். தூது அனுப்பும் போக்கு நாட்டுப்புற பாடல்களிலும் காணமுடிகின்றது.
இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சியால் செய்தி அனுப்புவது எளிதாகி விட்டது. நினைத்த உடனேயே செய்தி அனுப்பும் வசதி உள்ளது. ஆனால் பண்டைய காலத்தில் அப்படி இல்லை. பல தடைகளைக் கடந்தே செய்தியை அனுப்ப முடியும். காதல் தூது அனுப்பும் வசதி பல இருந்தாலும் இயற்கையைத் தூதாக அனுப்பும் பழக்கம் சங்க இலக்கியத்தில் உள்ளது. காதலைச் சொல்ல தூது ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனை,
"ஆணும் பெண்ணும் அவரவர் காதல்
பாணன் முதலிய உயர்தினையோடும்
கிள்ளை முதலை அஃறிணையோடும்
சொல்லித் தூது போய்வா என்னக்
கலிதவன் பாவால் அறைவது தூது" 6
என்ற பாடல் வரியாக முத்துவீரியம் குறிப்பிடுகிறது.
நாட்டுப்புறப் பாடல்களில் இலக்கண யாப்பு தேவையில்லை. இங்கே, ஒருத்தி, ஒருவன் மேல் கொண்டக் காதலை அவனுக்குத் தெரியப்படுத்த தண்ணீரைத் தூதாக அனுப்புகின்றாள்.
"ஓடையிலே ஓடு தண்ணீ ஒரு நிமிடம்
நில்லுங்களேன் - ஏங்
அத்த மொவனுகிட்ட நாங்(ன்)
குளிக்கிரதா சொல்லுங்களேன்
அடையாளம் சொல்லி விடுவேன்
அப்படியே கேளுங்களேன் - அஞ்சி
நிமிசத்திலே அவன வரச் சொல்லுங்களேன்
புள்ளையாரு கோயிலிலே பொம்மபோல
குந்திருப்பாங் - எம்பேர சொன்னிங்கன்னா
எழுந்து நின்னு வணக்கம் வைப்பாங்
ஏரிக்கர தண்ணீகளாக எங்குதப்பா பேசாதிங்க
எம்மாமங் மனம் நோகாம மரியாதையா பேசிடுங்க
வீராணம் தண்ணிகளா நீங்க
வேகமாக சொல்லுங்களேன் - வெகு
நேரம் காத்திருக்கும்
எங் வேதனையை சொல்லுங்களேன்" 7
என்ற பாடல் வழியாக அத்தை மகன் அடையாளத்தைச் சொல்லி தண்ணீரை தூதாக அனுப்புகிறாள் ஒருத்தி. அத்தண்ணீரிடம் எப்படி பேச வேண்டும் என்பதையும் அத்தை மகன் மீது தனக்கு எவ்வளவு காதல் இருக்கிறது என்பதையும் கூறுகின்றாள்.
இதில் காதல் கொண்ட தலைவி தலைவனுக்குத் தன் காதலைச் சொல்ல தூது அனுப்புவதில் அத்தலைவியின் மனவுணர்வுகள் மிக இயல்பாய் வெளிப்படுகின்றன.
- காதலர் சந்திப்பில் நடைமுறைச் சிக்கல்கள்
சங்க காலம் முதல் இக்காலம் வரை உள்ள இலக்கியங்களில் காதலர்கள் சந்திப்பின் போது ஏற்படுகின்றன நடைமுறைச் சிக்கல்களை இலக்கியத்தின் வாயிலாகவும் நம்மால் பார்க்க முடிகிறது. நடைமுறை வாழ்க்கையில் இச்சந்திப்புகள் பல இடையூறுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் இடையே நடைபெறுகின்றன. மேலும், காதலர்களின் வாழ்க்கையில் சந்திப்பு என்பது அவர்களால் ஏற்படுத்தி கொள்வது அல்லது எதிர்பாராமல் ஏற்படுவது உண்டு. இச்சந்திப்பு நேரும் இடங்களில் இவ்விருவர்களின் சுற்றத்தாரோ அல்லது உறவினர்களோ பார்க்காத வரை நல்லது. பார்க்க நேரிட்டால் இவர்களுக்கு இடையூறு செய்வதும் அல்லது பெற்றோரிடத்தில் அவதூராக சொல்வதும் உண்டு. இந்நடைமுறை சிக்கல்கள் சங்க இலக்கியங்களில் மட்டுமல்லாது ஏனைய இலக்கிய வகைகளிலும் மிகுதியாக பேசப்பட்டுள்ளன.
நாட்டுப்புற நாயகன் ஒருவன் தன் காதலியை மாமரத்து தோப்பு, வாய்க்கால் போன்ற இடங்களில் சந்தித்த நிகழ்வினை அறிந்த பெண்ணின் உறவின்ர் அவனை அடிப்பதற்கு ஏற்பாடு செய்கின்றனர். செய்யாத தவறுகள் செய்துவிட்டதாக குற்றம் சுமத்துகிறார்கள். இதனை
"மாமரத்து தோப்புக்குள்ள மறைமுகமா சந்திச்சோம்
வயலறுப்பு நடக்கயில வாய்க்காலிலே சந்திச்சோம்
சந்தால ஒருத்தன் பார்த்து சனத்தையெல்லாம் ஒன்னா சேத்த்து
ஆளு வச்சி அடிப்பதற்கு பேச்சு நடக்குது
பன்னாத தப்புக் கூட பரவி கெடக்குது
உன் அப்பன்காரன் என்னைப் பாத்து அறுவா தூக்குறான்
உன் அண்ணன்காரன் என்னைப் பாத்து கம்ப எடுக்கறான்
உன் அம்மாவும் சும்மாயில்லை திட்டி தீக்குறா
உன் சித்திக்கும் புத்தியில்ல கொத்தி எடுக்குறா" 8
என்று இப்பாடல் கூறுவதன் மூலம் உணரமுடிகின்றது. மேலும், காதலன் தனது காதலியுடன் பகுழகுவதை அறிந்த காதலியின் தாய் தந்தையர், உடன்பிறந்த அண்ணன், சின்னம்மா போன்றோர்கள் காதலனுடன் பழக விடாமல் காதலனை கொலை செய்ய ஆயுதங்களால் பயமுறுத்துவதை வெளிப்படுத்தும் விதமாகவும், நடைமுறை வாழ்வின் காதலர்களுக்கு இருக்கின்ற சிக்கல்களையும், பிரச்சனைகளையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
முடிவுரை :
மனிதஉறவுகளால் மட்டுமே மாற்றம் கண்ட தமிழர்க் காதல் நீண்ட நெடுங்கால பயணத்தின் அடிச்சுவடுகளை நமக்கு வழங்கியிருக்கின்றன. மக்களின் ஒப்புயர்வற்ற எண்ணங்களின் வெளிப்பாட்டு உணர்வாகக் காதல் இடம் பிடித்திருக்கிறது. இக்காதலின் முகவரிகள் மற்றும் அடையாளங்கள் யாவும் தமிழர் வாழ்வில் இரண்டிறக் கலந்திருக்கின்றன. கலப்படமற்ற, காதலையும், அதன் எண்ணங்களையும், உயர்த்திக் காட்டும் விதமாக நாட்டுப்புற காதல் இசைப் பாடல்கள், அமைந்துள்ளன. காதலர்கள் தமது பாடலில், பல கருத்துக்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். அல்லது காதலர்கள் பாடிக் கொள்வது போன்ற பாவனைப் பாடல்கள் மூலமாகப் பல செய்திகள் உலா வருகின்றன. நாட்டுபுற மக்கள் மட்டுமல்லாது, தென் பிராந்தியங்களின் மக்களினம் யாவும் முழுமையான அன்பையும், அதன் ஆழமான பிறப்பிடச் சிந்தனைகளையும் முன்னிலைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். காதல் என்பது தேன்கூடு என்றும், அதைக் கட்டுவது என்றால் பெரும்பாடு, என்கிற உயர்ந்த காதல் சிந்தனை இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறான சிந்தனைத்துளிகள் காதல் இசைப் பாடல்களில் அதிகம் காணப்பட்டுள்ளன. காதல் இசைப் பாடல்களில் மனவுணர்வுகள், மற்றும் வாழ்வியல் நடைமுறைகள், தாராளமாகப் பின்பற்றப்பட்டுள்ளன என்பதை இதன் வழியாக அறிய முடிகின்றது.
சான்றென் விளக்கம்
1. கி.வா.ஜெகநாதன், மலையருவி, ப.36
2. மேலது நூல், ப.38
3. டாக்டர் வ.சுப.மாணிக்கம், தமிழ்க்காதல், முன்னுரை, ப.3
4. குறுந்தோகைப் பாடல்.40
5. குறள் - 690
6. முத்துவீரியம், சூ.172
7. வசந்தா, ஜி.தகவலாளி, திருப்புறம்பியம், கும்பகோணம் வட்டம்.
8. திருத்தணி, தகவலாளர், நல்லுச்சேரி, தஞ்சாவூர் வட்டம்
ஆய்விற்கு துணை நின்ற நூல்கள்
1. அழகப்பன், ஆறு, நாட்டுப்புறப் பாடல்கள், திறனாய்வு, கழக வெளியீடு,
சென்னை, ஆண்டு – 1970.
2. இராமநாதன், ஆறு, நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்,
மணிவாசகர் நூலகம், 12(5), மேல சன்னதி சிதம்பரம், ஆண்டு.1982.
3. கதிரே ஔவையார், குறுந்தொகை, பொ.வே.சோமசுந்தரனார் உரை,
கழக வெளியடு, சென்னை, 1965 ஆண்டு.
4. மாணிக்கம், வ.சுப. தமிழ்க்காதல், பாரி நிலையம், சென்னை, மூன்றாம்
பதிப்பு - 1980 ஆண்டு.
5. முருகானந்தம், ச., மக்கள் வழக்காற்றியல், ஐந்திணைப் பதிப்பகம், 279, பைகிராப்ட்ஸ் (பாரதி) சாலை, திருவல்லிக்கேணி, சென்னை, முதற்பதிப்பு 1989.