பதிற்றுப்பத்தில் மரங்கள்

தமிழ்மொழி எண்ணற்ற இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் மிகப்பழமையானது சங்க இலக்கியமாகும். பாட்டும் தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். இதில் பாட்டு என்பது பத்துப்பாட்டையும் தொகையென்பது எட்டுத்தொகையையும் குறிக்கும். எட்டுத்தொகையுள் புறப்பொருள் சார்ந்த நூலாக அமைந்து காணப்படுபவை புறநானூறும் பதிற்றுப்பத்துமாகும். இவற்றில் பதிற்றுப்பத்து சேர மன்னர்களை மட்டுமே புகழ்ந்து பாடக்கூடிய நூலாகும். இந்நூலில் அமைந்து காணப்படும் மரங்களை எடுத்தியம்புவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
சேர நாட்டின் வளம் :
சேர நாடு மலைவளம் மிகுந்து காணப்படுவதாகும். மலைகளில் ஓங்கி உயர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. சேர நாட்டில் ஆட்சி புரிந்து வந்த மன்னர்களின் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் மரங்கள் அதன் பயன்பாடுகள் வீரர்களுக்கு காட்டிய ஒப்புமை போன்ற உயரிய கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மரங்கள் மனித வாழ்விற்கு இன்றியமையாதது. மரங்களைத் தெய்வமாக வணங்குவதும் பண்டைய மக்களின் மரபாகும். மரங்கள் நிலங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.
முள் மரம் :
பகைவர்களை அழிக்கும் வலிமையான முயற்சியை உடையவன் இமயவரம்பன் நெடுஞ்நேரலாதன். இத்தகைய வீரம் பொருந்திய சேர மன்னனின் எல்லையில் முள் முருக்கமரங்கள் அடர்ந்த மலைச்சரிவுகளில் உறங்கும் கவரிமான்கள் பகலில் அவை நீருண்ட அருவியையும் நரந்தம் புல்லையும் இரவில் கனவில் கண்டு மகிழுமாம். இதனை
“கவிர்;ததை சிலம்பில் துஞ்சும் கவரி”
( பதி .ப -இ.ப – 11-21 )
என்ற பாடல் விளக்குகின்றது.
இதில் கவிர் என்பது முள்முருக்க மரமாகும்.
கடம்ப மரம் :
இமயவரம்பன் பகைவர் அரண்களை அழித்து பலர் சூழ்ந்து காத்த திரண்ட பூக்கள் உடைய காவல் மிக்க கடம்ப மரத்தை அடியோடு வெட்டி அம்மரத்துண்டுகளால் முரசினைச் செய்த செய்தி இடம்பெறுகிறது.
“பலர்மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்” –
(பதி.ப -இ.ப -11 -12)

“கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பணை” 

(பதி.ப -இ.ப -11 -5)
இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் கடற்கரையில் உள்ள கடம்ப மரத்தினை வெட்டி வென்ற செய்தியையும்
“அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து.”
(பதி.ப -ஒ.ப -88-6)
ஆகிய பாடலடிகள் கடம்பின் சிறப்பை வெளிக்காட்டி நிற்கின்றன.
உன்ன மரம் :
உன்னமரம் செழித்திருந்தால் வெற்றியும்; வறண்டிருந்தால் தோல்வியும் அடைவர் என்பது மரபு.
வறட்சியினால் விளைநிலங்கள் விளைவு இல்லாத காலத்தில் சில்வீடு என்னும் வண்டுகள் காய்ந்த தலையினையுடைய உன்ன மரத்தினை கிளைகளின் உட்புறத்திலிருந்து ஓசை எழுப்பும். இதனை
“அலந்தலை உன்னத்து அம்கவடு பொருந்திச்”;
( பதி.ப -மூ.ப.23-1)
பகைமன்னர்கள் போருக்கு வருவதற்கு முன்பு உன்னமரங்கள் கரிந்து காட்டினவாம். இதனை
“புன்கால் உன்னம் சாய தெண்கண்.”
(பதி.ப – நா.ப – 40 -17)
உன்னமரத்துப் பகைவன் எங்கள் தலைவன் ஆவான் என பாரிவேள் நாட்டு மகளிர் எண்ணியதை

“புன்கால் உன்னத்துப் பகைவன் எம்கோ” 
                    (பதி.ப - ஏ.ப - 61-6) 

என்ற பாடலடி விளங்குகின்றன.
மருதமரம் :
பகைவர் நாடுகள் பறவைகள் தங்கி மகிழும் நிலையில் மருதமரங்கள் உள்ளதை
“மருது இமிழ்ந்து ஓங்கிய நளிஇரும் பரப்பின்”.
(பதி.ப.மூ.ப -23-18)
என்றும் மருதமரத்தின் உச்சிவரை புதுவெள்ளம் வந்து பெருகி அழிக்கும் செய்தியை

 “தேம்பாய் மருதம் முதல்படக் கொன்று”. 
                   (பதி.ப - மூ.ப -30-16)

என்ற பாடலடிகள் பதிவு செய்கின்றன.
காஞ்சிமரம் :
மிகுந்த வெள்ளப்பெருக்கினால் மணல் மிக்க துறைகளையும் சிதைந்த காஞ்சி மரங்களும் அழகுடையவாய் விளங்கின. இதனை
“மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு”
(பதி.ப-மூ.ப -23-19)
ஏன்ற வரியின் மூலம் விளங்கமுடிகிறது.
கொன்றை :
கொன்றை மரங்களில் ஒருவகை புலிநகக் கொன்றையாகும்.
மரம் வளர்ந்து பூக்கள் கொத்தாக மலர்ந்துள்ளதைஇ
“ இணர்ததை ஞாழல் கரைகெழு பெருந்துறை”.
(பதி.ப. மூ.ப.30-1)
என்னும் வரியின் வழி காணலாகிறது.
புன்னை (சுரப்புன்னை):
உப்பங்கழியில் மீன்களை உண்ணும் பொருட்டு நாரைகள் துழாவிக் கொண்டு அருகிலுள்ள பூங்கொத்துகளை உடைய புன்னைமரக் கிகைளகளில் தங்குமாம். இச்செய்தியை
“பாசடைப் பணிக்கழி துழைஇ புன்னை
வால்இணர்ப் படுசினைக் குருகு இறை கொள்ளும்”.
(பதி.ப. மூ.ப -30-4)
என்றும்
“கூவல் துழந்த தடந்தாள் நாரை
குவிஇணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும்”.
(பதி.ப. ஆ.ப – 51-4இ5)
என்றும் இருஇடங்களில் பாடலடிகள் வெளிக்காட்டி நிற்கின்றன.
வாகைமரம் :
கடம்பின் பெருவாயில் என்ற ஊரில் இருந்த நன்னனைப் போரில் வென்று அவன் காவல் மரமாகிய வாகை மரத்தை வெட்டியதை மூன்று இடங்களில் பதிவாகியுள்ளன. இதனை
……………… நன்னனை
நிலைச்செருவின் ஆற்றலை அறுத்துஇ அவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து”.
(பதி.ப.நா.ப -31-7இ8இ9)
“ ………….. பொலந்தேர் நன்னன்
சுடர் வீ வாகைக் கடிமுதல் கடிந்த”
(பதி.ப.நா.ப – 40-14இ15)
சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து”
(பதி.ப.ஒ.ப – 88 -10)
என்ற பாடல்வழி அறிய முடிகின்றன.
மூங்கில் மரம் :
யானைப் படையோடு சென்று தங்கும் இடத்தில் நெடுங்காலஇ; நாரைகள் இருந்து இரை கவரும் வளைந்த முடம்பெற்ற மூங்கில்கள் போன்று பருத்த நெற்பயிரின் தாள்கள் உள்ளனவாம்.
முடந்தை நெல்லின் கழைஅமல் கழனி”.
(பதி.ப.நா.ப -32-13)
என்றும்
கொடிய காட்டு வழிகளில் மழை பெய்யாமலிருந்ததால் உலர்ந்து வாடிய மூங்கில்கள் காணப்படுகின்றன.
“மழை பெயல்மாறிய கழைதிரங்கு அத்தம்”
(பதி.ப –ஐ.ப – 41 -14)
என்றும்
இளைய களிறு வலிமை மிக்கு மதம்கொண்டு மூங்கிலின் முளைமேல் காலை வைத்து அழுத்துவது பகை வீரர்கள் மன்னனிடம் அகப்பட்டதை உவமையாகக் காட்டுகிறது.
“கால்முளை மூங்கில் கவர்கிளை போல”
(பதி.ப.ஒ.ப – 84 -12)
என்றும் மூங்கில் சார்ந்த செய்திகளைக் காணமுடிகின்றன.
வேலமரம் :
புறாக்கூட்டங்கள் சிலந்திகள் சுற்றிய வலைகளை வேடனிட்ட வலை என்று எண்ணிக் காய்ந்த உச்சியையுடைய வேலமரத்தின் கீழ்ப் பெரிய கிளைகளில் அஞ்சும்படி அலறுமாம். இதனை
“சிறியிலை வேலம் பெரிய தோன்றும்.”
(பதி.ப.- ஆ.ப -58 -14)
என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேங்கைமரம் :
இளையர்கள் பாடிய பாடலை புலிக்கூட்டத்தின் குரல் எனக்கருதி வலிமைமிக்க ஆண்யானை சினந்து மலைப்பக்கம் உள்ள வேங்கை மரத்தினை வளைத்துப் பிடுங்கி தன் பெரிய தலையில் அணிந்தது. இதனை
“வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கைப்”
(பதி.ப.ஐ.ப -41-8)
வானை முட்டும் உயரங்களுக்கு வேங்கை மரங்கள் வளர்ந்த மலை உச்சியையுடையது சேரநாடு. இதனை
“வேங்கை விரிந்து விசும்புறு சேட்சிமை.”
(பதி.ப. ஒ.ப – 88 – 34)
எனும் வரிகளால் அறியமுடிகின்றன.
வேம்புமரம் :
உழிஞை மாலை சூடிப்போர் புரியும் அருகை என்பவனின் மோகூர் மன்னன் பழையன் மீது படையெடுத்து அவன் காவல்மரமான வேம்பினை வெட்டினான். அம்மரங்களை முரசம் செய்ய வண்டியில் ஏற்றிச்சென்றான். இச்செய்தியை
“நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து.”
(பதி.ப. ஐ.ப -44 -15)
என்ற பாடல் பதிவு செய்கின்றது.
வன்னிமரம் :
இறந்த அரசர்களை இட்டுப் புதைத்த சுடுகாட்டில் வன்னிமரம் நிற்கும் மன்றம் உள்ளதைக் காணமுடிகிறது.
“மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே.”
( பதி.ப. ஐ.ப. -44 -22 23)
பிடாமரம் :
செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவனின் நாட்டில் முல்லை புதரினில் தேனுண்டு மகிழ்ந்த வண்டுகள் பிடாமரத்தின் மாலைபோல் மலர்ந்த பூங்கொத்துகளில் தங்கும் இயல்புடையன. இதனை

“கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்”.
(பதி.ப. ஏ.ப – 66-17)
என்ற பாடல்வரி பதிவுசெய்கின்றது.
சந்தனம் :
வானி என்னும் ஆற்றுநீரில் சந்தன மரங்கள் அடித்துக் கொண்டு வருவது சோழ நாட்டின் வளங்களைக் குறிக்கின்றன. இதனை
“சாந்துவரு வாணி நீரினும்.”
(பதி.ப.ஒ.ப-86 -12)
என்ற பாடல் வரிகளால் அறியமுடிகிறது.
இவ்வாறாக பதிற்றுப்பத்தில் மரங்கள் பற்றிய செய்திகள் மிகுதியாகப் பதிவு செய்யப்பட்டள்ளன. மக்களின்றி மரங்கள் தனித்தியங்கும் மரங்களின்றி மனிதன் தனித்தியங்க முடியாது. அன்றைய மக்கள்இ மன்னர்கள்இ இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து வந்துள்;ளனர் என்பதற்கு இவை சான்றுகளாக அமைந்துள்ளன. இவற்றை உணர்ந்து மரங்களைப் பேணி வளர்த்து இயற்கையுடன் இன்பமான வாழிவினை வாழ வழிவகை செய்வோம்.


ப.கோகுல்நாத்
முனைவர் பட்ட மாணாக்கன்,
த.சா.அ.க.அ. தமிழ்க்கல்லூரி,
பேரூர், கோயம்புத்தூர் -10.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *