தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

ந. தினேஷ் குமார்,
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி,
திருவாரூர் 610003.

முன்னுரை
தமிழ் இலக்கியங்கள் தமிழர் தம் வாழ்வை எதிரொலிப்பன இயற்கையோடு இயைந்த வாழ்வினர் தமிழர், அவர்களுடைய மொழியும் அது போலவே அறிவு அற்றங் காக்கும் கருவி என்றார் திருவள்ளுவர் அறிவின் நுண்ணிய வளர்ச்சியே அறிவியல். அறிவியல் வாழ்வை வளப்படுத்துகின்றது. மொழியைப் பண்படுத்துகிறது என்பர் அறிஞர். தமிழ்மொழி சிந்தனைக் கருவூலமாய்த் திகழ்வது, தமிழ் இலக்கியங்களை நுண்ணிதின் ஆராய்கின்றபோது எத்தனை அறிவியல் கருத்துக்கள் ஆழப் புதைந்து கிடப்பதை அறிய முடிகின்றது. பண்டைத் தமிழர்கள் அறிவியல் துறையில் பெரும் புலமை கொண்டிருந்தனர் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மேலை நாட்டவர் கண்டறிந்ததாகக் கூறப்படும் பல உண்மைகளைப் பல நூற்றாண்டுக்கு முன்னதாகவே தமிழர்களும் அறிந்திருந்தார்கள். தொல்காப்பியம் சங்க இலக்கிங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், திருமந்திரம், திருவாசகம் முதலிய நூல்களின் மூலம் பழந்தமிழர்கள் கையாண்ட அறிவியல் நுணுக்கங்களைக் காணலாம்.

தமிழர்களின் வானியல் சிந்தனைகள்
தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது. வானியல் பற்றிய அறிவாகும். ஞாயிறு, திங்கள் என்று ஆராய முற்பட்ட போதே வானியல் ஆய்வு தோன்றிவிட்டது எனலாம். உலகில் தோன்றிய பல்வேறு அறிவியல் கல்விகளில் மிகத் தொன்மையானதும் பழமையானதும் வானியல் கல்வி. உலகம் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின் (தொல். பொருள். 635)
இதுபோன்றதொரு குறிப்பை
மண் திணிந்த நிலனும், நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும், வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு,
ஐம்பெரும்பூதத்து இயற்கை போல் (புறம் . 2)
இப்புறநானூற்றுப்பாடல்வழி அறிக்கின்றோம்

பேரண்டத்தின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.ஆனால் உலகம் உருண்டை என்பதை 16ம் நூற்றாண்டிற்கு பின்பே உறுதிசெய்தனர். இவ்வுலகில் பேரண்டத்தின் ஒரு கோள் என்பதையும் இவ் அண்டப்பரப்பின் மீது உள்ள கோள்களையும் தமிழ் இலக்கியங்கள் விரிவாக பேசுகின்றன அதுவும் ஆன்ம இயல் பேசும் திருவாசகம் விண்ணிலைப் பேசுகின்றது.

அண்டப் பகுதியான் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
இத்திருவாசகம் வரிகள் தெளிந்த வானியல் அறிவை வெளிப்படுத்துகின்றன பெருவெடிப்பு கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை ஆழமாக விளக்குகின்றது. உலகம் என்ற தமிழ்ச்சொல் உலவு என்ற சொல்லின் அடியாகப்பிறந்தது. உலவு என்பது சுற்றுதல் என்ற பொருளைத் தருகிறது. உலகம் தன்னையும் சுற்றிக்கொண்டு ஞாயிற்றையும் சுற்றி வருகிறது. என்னும் அறிவியல் கருத்து இதில் வெளிப்படுவதை காணமுடிகிறது. ஞாலம் என்னும் தமிழ்ச்சொல் ஞால் என்னும் சொல்லடியாகத் தோன்றியது என்பர். ஞால் என்பதற்குத் தொங்குதல் என்பது பொருள். எவ்விதப் பற்றுக்கோடுமின்றி அண்டவெளியில் உலகம் தொங்கிக் கொண்டிருப்பதை இவை உணர்த்துகின்றன. வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு. இதனையும் பண்டைத் தமிழர் அறிந்திருந்தனர். இதனை வறிது நிலை இய காயமும் (புறம் . 30) என்ற பாடல் வரி உணர்த்துகின்றது. மேகம் இதனை வலுப்படுத்தும் விதமாக வள்ளுவர் கூறுவது.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள். 1031)
எந்த கருவியும் இல்லாத காலத்தில் வள்ளுவர் உணர்ந்து தம் குறளில் கையாண்டுள்ளமை வியப்புக்குரியது, உலகிற்கு ஒளியூட்டும், ஞாயிற்றையும், திங்களையும், தாம் கண்டறிந்த செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, என அனைத்துக் கோள்களையும் கிழமைப் பெயர்களாகச் சுட்டியிருப்பதன் மூலம் தெளிவான வானியல் அறிவு பெற்றவர்களாக தமிழர்கள் திகழ்ந்திருப்பது தெரியவருகிறது.

தமிழர்கள் கூறும் கோள்களின் காட்சி
வாண்வெளியில் மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு. ஞாயிற்றை வழிபடும் வழக்கம் வானவியல் மரபால் உண்டானது எனலாம். சிலப்பதிகார தொடக்கத்திலே இளங்கோவடிகள் ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என்று ஞாயிற்றை போற்றியுள்ளமையை காணமுடிகின்றது. ஞாயிற்றை சுற்றிய பாதையை ஞாயிறு வட்டம் என்றனர் பழந்தமிழர் என புறநானூறு கூறுகின்றது.

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்பு சூழ்ந்த மண்டிலமும் (புறம் – 30)
இப்பாடலில் ஞாயிறு வட்டம், அதன் இயக்கம் அந்தரமாய் நிற்கும் வான்வெளி மண்டலம் என்பன பற்றிய வானியல் அறிவை உணர முடிகின்றது. மேலும் இதனை
வெய்யோன் இருள்வன பதங்கள் கூரியன் (திவாகரம். நூ. 57)
கி.பி. 8ம் நூற்றாண்டு நூலான திபாகரத்தில் ஞாயிற்றின் பெயர்களாக 35 சொற்களை தொகுத்தளித்துள்ளார். இதுவே தமிழர்கள் வானியல் ஆய்வில் ஈடுப்பட்டதின் விளைவாக பிறந்த சொற்களாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

பரிதிபாற் கரன்ஆ தித்தன் பனிப்பகை சுடர் பதங்கள்(சூடாமணி நிகண்டு. நூ. 55 – 57)
கி.பி. 16ம் நூற்றாண்டு நூலான சூடாமணி நிகண்டின் ஆசிரியர் மண்டலபுருடர் ஞாயிற்றின் பெயர்களாக 52 சொற்களைத் தொகுத்துள்ளார். திவாகரத் நிகண்டில் இடம்பெற்றுள்ள ஞாயிறு தொடர்பான சொற்களை விடவும். 16ம் நூற்றாண்டில் புதிதாக 17 சொற்கள் பிறந்திருப்பதைக் காணமுடிகின்றது.
ஆதவன் ருக்கனரு ணன்கனலி மாரித் தண்டன் (நாமதீபநிகண்டு. நூ. 92 – 95)

19ம் நூற்றாண்டு நூலான நாமதீப நிகண்டின் ஆசிரியர் சுப்பிரமணிய கவிராயர் ஞாயிற்றின் பெயர்களாக 67 சொற்களைப் தொகுத்திருப்பது வியத்தகுஒன்றாகும் இவை முற்கூறப்பட்ட நிகண்டைவிட32 சொற்கள் பெருகியிருப்பது தமிழர்களிடையே இருந்த கோள் பற்றிய ஆராய்ச்சி அறிவே காரணமாகும்.

திங்கள் தோற்றம்
தானே ஒளிவிடக்ககூடிய ஞாயிற்றை நாள்மீன் என்றும் ஞாயிற்றிடமிருந்து ஒளி பெற்று ஒளிவிடக்கூடியவற்றை கோள்மீன் என்றும் பண்டைத்தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர். திங்கள் தானே ஒளி விடுவதில்லை இதனை

மாதர்முகம் போல் ஒளிவிட வல்லை யேல்
காதலை வாழி மதி
திங்களைப் பாம்பு கொண்டற்று (குறள். 1118)(குறள் 1146)
எனும் குறள் திங்கள் மறைப்பு (சந்திரகிரகணம்) பற்றியதாகும். திங்களின் நிலையைக் கருதித் தேய்பிறை, வளர்பிறை என்றும் குறித்துள்ளனர்.

கோள்கள் பற்றிய தமிழரின் கருத்து
உலகிற்கு ஒளி ஊட்டும் ஞாயிற்றையும் திங்களையும் நாம் கண்டறிந்த கோள்களையும் இணைத்துக் கிழமை ஆக்கி ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எனக் கண்டு தம் வாழ்வியலோடு இணைத்துக்கொண்டவர்கள் தமிழர்கள் கோள்களின் நிறம், வடிவம் முதலியவற்றையும் அறிந்திருந்தனர். இவர்கள் விண்ணிலே மின்னும் விண்மீன்களையும், திரியும் கோள்களையும் கண்டு அறிவியல் வழியில் தெளிவான வாணியல் அறிவு பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். செந்நிறமாய் இருந்த கோளை செவ்வாய் என்றனர் இன்றைய அறிவியல் வல்லுனர்கள் செவ்வாய் கோளில் மண் செம்மை நிறமாய் இருப்பதை அங்கு சென்றுள்ள செயற்கைக்கோள் அனுப்பும் ஒளிப்படங்கள் வாயிலாய் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழர்கள் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னரே இக்கோளினைக் குறித்து ஆய்வு செய்ததின் விளைவாக செவ்வாய் மங்கலன் போன்ற சொற்களைத் தோற்றுவித்துள்ளனர். அவையே தற்போது விண்ணில் பாய்ந்து வெற்றிப்பெற்ற செவ்வாய் கிரக செயற்கை கோளுக்கு மங்கள்யான் என பெயரிட்டுள்ளனர். இந்த கோளினைப் பற்றி திவாகரம் நிகண்டு கூறும்போது.
அங்காரகன் குசன் ஆரல் வக்கிரன் (திவாகரம். நூ. 59)
கருதிய செந்தீவண்ணன் காட்டும் அங்காரகன் டேய் (சூடாமணி நிகண்டு. நூ. 60)
மங்கலன்சே யாரல்வள வன்றீ மகரவுச் சான் (நாமதீப நிகண்டு. நூ. 98)
செவ்வாய் கோள் செந்நிறம் உடையது என்பதனைக் குறிப்பிடும் வகையில் செந்தீ வண்ணன், போன்ற சொற்கள் மேற்கண்ட நிகண்டுகளில் இடம் பெற்றிருப்பனத அறிந்து கொள்ள முடிகின்றது.

புதிதாக கண்டறியப்பட்ட கோளாதலின் புதனிற்கு அறிவன் என்ற பெயர் வந்தது. புதன் தொடர்புடைய பெயர்கள் நிகண்டு நூல்களில் இடம்பெற்றள்ளன.
அருணன் தூதுவன் அனுவழி மேனத (திவாகரம். நூ. 60)
சிந்தை கூரியன் கணக்கன் தேர்பாகன் அருணன் சாமன் (சூடாமணி நிகண்டு. நூ.61)
மேனதபுந்தி மால்புலவன் விந்தைக் கோனென் பரியான் (நாமதிப நிகண்டு. நூ. 99)
மேற்கண்ட நிகண்டு நூல்களில் புதன் பற்றிய பெயர்கள் 14,16,19 எனச் சொற்பொருள்கள் அதிகரித்து வந்துள்ளதைக் காணமுடிகின்றது.

கோள்களின் மிகப்பெரிய கோளாக வியாழன் திகழ்கின்றன எனவே தான் அவற்றிற்கு பெரிய நிறைந்த என்று பொருள்படும்படியான வியாழன் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
மந்திரி ஆசான் பீதகன் சுரகுரு (திவாகரம். நூ.61)
அந்தணன்சி கண்டிகன்பொன் னாங்கீர சன்றேவே (நாமதீப நிகண்டு. நூ. 100)
வியாழன் பற்றிய தேடல் அதிக இருந்ததின் காரணமாகவே திடாகர காலத்தில் இருந்த 11 பெயர்களைக் காட்டிலும் 19ம் நூற்றாண்டு நூலான நாமதீப நிகண்டில் 16 பெயர்களாக அதிகரித்துள்ளமை புலப்படுகின்றது.

வெண்மை நிறமுடைய கோள் வெள்ளி என அழைத்தனர். ஞாயிற்றின் உதயத்தின் முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதால் இக்கோளினை விடிவெள்ளி என்கின்றனர். இக்கோளில் வெள்ளித்தாது இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். வெள்ளிக் கோளின் பெயர்கள் நிகண்டு நூல்களில் கூறும்போது.
பளிங்கு பார்க்கவன் புகர்புயல் மழைக்கோள் (திவாகரம் . நூ. 62)
பார்க்கவன் கங்கன்கவிப ளிங்கு சளன் (நாமதீப நிகண்டு. நூ. 101)

எட்டாம் நூற்றாண்டில் வெள்ளிக்கோளுக்குரிய பெயர்களாக 15 சொற்கள் இருந்தன. பின் 19ஆம் நூற்றாண்டில் 20 சொற்களாக அதிகரித்துள்ளமையை காண முடிகிறது.
தமிழர்கள் சனிக்கோளினைக் காரிக்கோள் என்றனர். காரி என்றால் கந்தகம் எனப் பொருள். இன்றைய அறிவியல் ஆராய்ச்சியில் சனிக்கோளில் கந்தகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். சனிக்கோளுக்குரிய பல சொற்கள் நிகண்டு நூல்களில் காட்சியளிக்கின்றன.
மந்தன் காரி கரியோன் முடவன் (திவாகரம், நூ. 63)
மந்தன்முட னோயன்மக ரன்கதிர் சேய் கன்காரி (நாமதீப நிகண்டு, நூ. 103)

சனிக்கோளுக்குரிய பெயர்களாக திவாகர நிகண்டில் 14 சொற்களும் நாமதீப நிகண்டில் 17 சொற்களும் தொகுக்கப்பட்டிருப்பதை உணர முடிகின்றது. இவ்வாறு தமிழர்கள் கோள்களைப் பற்றியும் அக்கோளின் நிறம், வடிவம், அதன் தன்மைகளைப் பற்றியும் நன்கு ஆராய்ந்து தெளிந்திருந்தனர் என்பதற்கான அளவுகோளாக மேற்கண்ட நிகண்டு நூல்கள் இருக்கின்றன. இதுமட்டும் இன்றி திருமுறைப்பாடல்களில் திருஞான சம்பந்தர் கோளறுபதிகத்தில் கோள்கள் பற்றிய தெளிவானதொரு குறிப்பினைத் தந்துள்ளார்.
வோயுறு தோளி பங்கன் விடமுண்டகண்டன்
……… ஞாயிறு, திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே… (2ஆம் திருமுறை பதிகம் எண். 85)

வான்வழிப் பயணம்
வானம், ஞாயிறு, திங்கள், விண்மீன் கோள்கள் என்பன மனிதருக்கு வியப்புப் பொருளாகத்தான் இருக்கின்றன. இருப்பினும் மனிதர்களின் அறிவினாலும் ஆற்றலினாலும் தொடர்முயற்சியினாலும் வானியல் புதிர்கள் நாள்தோறும் சிறிதுசிறிதாக வெளிப்பட்டு வருகின்றன. வானில் பறவை பறப்பதைக் கண்ட மனிதன் தானும் பறக்க முடியுமா? என்று கற்பனை செய்தான். அக்கற்பனை உண்மையாகி வானூர்தி உருவாகியது. பழந்தமிழ் இலக்கியத்தில் வான்வழிப் பயணங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதனை,
கோநகர் பிழைத்த கோவலன் தன்னொரு
வானவூர்தி ஏறினள் மாதோ (சிலம்பு. மதுரை. கா. 2-28-198)
வலவன ஏவா வானவூர்தி
எய்துப என்பதஞ் செய்வினை முடித்தெனக் (புறம். 27)
வல்லனவும் அமைத்தாங்கு ஏழு நாளிடை
செல்வதோர் மாமயில் செய்தனன் அன்றே
பொறிவலந் திரிப்பப் பொங்கி விண்தவழ் மேகம் பொழிந்து
விசும்புடைப் பறக்கும் வெய்ய (சீவக சிந்தாமணி 239)

நீரியல் அறிவு
நீர் மழையாக மண்ணுக்கு வந்து பிறகு ஆவியாகுவதும், மழை வளம் குன்றினால் வெப்பம் மிகும் தட்பவெப்பநிலை மாறும். இச்சுழற்சி இருப்பதால்தான் உயிர்கள் செழுமையாக வாழ்கின்றனர். இவை நடைபெறவில்லையெனில் கடல் வற்றும் என்பதனை
நெடுங்கடலும் தண்ணீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் (குறள் 17)

மேலும், மழையின் சிறப்பை உணர்ந்த வள்ளுவர் மழையை அமிழ்தம் என்கிறார். மேலும், நீரிப் பொருளின் சுருங்கா இயல்பை கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவியல் அறிஞர் பாஸ்கல் கூறினார். அதனை 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார்,
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி தொழி
நீருக்கு அழுத்தம் உண்டு என்பதனையும் உணர்த்துகிறார். நீரினை தேக்கி ஏரி, வாரி, மதகு, மடை, வாய்க்கால், மடு போன்றவற்றை கட்டி தமிழர்கள் நீரைப் பயன்படுத்தினர் என்பதனை,
தேவரின்றி வாடும் மரமெல்லாம் நீர்பாய் மடையின்றி
நீள் நெய்தல் வாடும்
மேலும், நீரின் இன்றியமையாமையை வள்ளுவர் நீரின்றியமையாது உலகு என்கிறார்.

முடிவுரை
பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனை அன்றாட வாழ்வியல் பயன்பாட்டிற்குரிய வாழ்வியல் சிந்தனை என்ற கருத்திற்கிணங்க பழந்தமிழர்களின் அறிவியல் அறிவு வளர்ச்சி பெற்று இன்று நம் மக்களிடம் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த உலகமே அண்டத்திற்குள் அடக்கம் என்பதையும் நம் முன்னோர்களான பழந்தமிழர்கள் இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளிலும் அறிவியல் தொடர்பான செய்தியைக் கூறியுள்ளனர். இவை பின்வரும் சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும் கருத்துப் புலப்படுத்தும் ஊடகமாகவும் இருந்தார்கள். திருவாசகத்தில் பல்வகை அறிவியல் செய்திகள் உயிரியல் செய்திகள் மருத்துவச் செய்திகள் விரவிக்கிடக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *