ப.மணிகண்டன்
மொழித்துறை, உதவிப் பேராசிரியர்,
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோவை-28.
முன்னுரை
சங்க இலக்கியத்தில் இயற்கையில் காணப்படும் விலங்குகள், பறவைகள், மரஞ் செடி கொடிகள் என ஓரறிவுயிர் முதல் ஐந்தறிவுடைய உயிர்கள் பற்றிய பல அரிய நுண்ணிய அறிவியல் செய்திகள் காணப்படுகின்றன.அவற்றைக் காண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
சங்க இலக்கியமும் ஐந்திணையும்
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த சங்ககால மக்கள் திணை அடிப்படையில் அறிவியல் செய்திகளை உவமாகவும், உள்ளுறையாகவும் கருப்பொருள்களைக் கொண்டு நயம்பட எடுத்துக் கூறியுள்ளனர்.இச்செய்திகள் ஐந்திணைப் பாகுபாட்டிற்கு உட்பட்டு, ஐந்து வகை நிலங்களிலும் நடைபெறுகின்றன.
சங்கப்புலவர்கள் காடுகளையும், சுரங்;;களையும் கடந்து செல்லுவதாக பல பாடல்கள் குறிஞ்சித் திணையிலும், பாலைத்திணையிலும் காணலாம். இப்பாடல்கள் இயற்கையில் எந்தெந்த சூழ்நிலையில் எந்தெந்த மரஞ்செடிகொடிகள், விலங்குகள் பறவைகள் காணப்படுகின்றன என்பதையும் நன்கு ஆராய்ந்து கூறிச் சென்றுள்ளனர். இதற்கு நுண்ணிய அறிவும், கல்வியும் இயற்கையில் ஈடுபாட்டு உணர்வும் அவசியம் ஆகும்.
சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் மரம், விலங்கு ஆகியவற்றின் முழு விளக்கமும் கூறப்பட்டுள்ளது.இவற்றைக் காணும் பொழுது சங்ககாலப்புலவர்களின் கவிதை நுட்பமா அல்லது அறிவியலா என்று எண்ணத் தோன்றுகிறது. கமுகின் பெருமையை உணர்த்த பாடலொன்று
“நீடுவெயில் உழந்த குறியிறைக் கணைக் கால் தொடை யமை பல் மலர்த் தோடு பொதிந்து யாத்த குடை ஓரண்ண கோள் அமை எருத்தின் பாளை பற்று அழிந்து ஒழியப் புறஞ்சேர்பு வாள் வடித்த அன்ன வயிறுடைப் பொதிய நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பிள் ஆரத்து அன்ன அணிகிளர் புதுப்பூ வார்உறு கவரியின் வண்டு உண விரிய முத்தின் அன்ன வெள் வீதாஅய் அலகின் அன்ன அறிநிறத்து ஆலி நகை ரனி வளாக்கும் சிறப்பின் தகைமிகப் பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்” (அகம் 335)
கமுகின் அடி மரம், கழுத்து, பாளை, அரும்பு, முதிர்ந்த பூ, காய், பழம், பழத்தின் சுவை ஆகியவை வருணிக்கப்பட்டுள்ளது சங்க நூல்களில் கமுகைப் பற்றி முழுவதும் கூறும் பாடல் இதுவே ஆகும்.
மான்
கலை மானின் கொம்பு முளைப்பதும் கிளை விடுவதும் வளர்வதும், உதிர்ப்பதும், மீண்டும் முளைப்பதும் ஆகிய செயல்களைத் தற்காலத்தில் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளனர் அறிவியலாளர்கள்.ஆனால் இராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதனை சங்ககாலப் பாடல்கள் கூறியுள்ளன.
“கலைமான் தலையின் முதன் முதல் கவர்த்த கோடல் அம் கவட்ட குறுங்கால் அழுஞ்சில்” (அகம் 151)
என்ற அகநானூற்றப் பாடலில் கலைமானின் தலையில் முதன் முதலாகக் கவையுடன் கொம்பு முளைப்பதைக் கூறி பின்பு கொம்பு முதிர முதிர புதிய கிளைகள் கொம்பில் தொன்றிக் கவை கவையாகக் கிளைவிடும் என்கின்றனர்.
“ பல்கவர் மருப்பின் முது மான் போக்கி” (283 அகம்)
இவ்வாறு பல்கவர் உடையது முதியமான்.முதிர்ந்த கொம்புகளை கலைமான் உதிர்த்து விடுகின்றன.இதனை
“இறுகு புனம் மேய்ந்த அறுகோட்டு முற்றல் அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை” (நற் 265)
“கள்ளி அம் காட்ட புள்ளியம் பொறிக் கலை வறளன் உறல் அம்கோடு உதிர வலங் கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை” (அகம் 97)
கலைமானிற்கு அதன் கொம்புதான் புலியிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றது என்பதை உணர்ந்து கூறியுள்ளதைக் காணலாம்.மானின் கொம்புகள் உதிர்த்ததும் புதிய கொம்புகள் முளைக்கும்.அக் கொம்புகள் மென்மையான தோலால் மூடப்பட்டு இருக்கும்.இந்நுட்பமான செய்தியைக் கூட சங்கப் புலவர்கள் ஆராய்ந்து கூறியிருப்பது வியப்பளிக்கிறது. “புள்ளி அம்பினை உணிஇய உள்ளி அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி மறு மருப்பு இளங்கோடு அதிரக்கூஉம்” (அகம் 291)
உதிர்ந்த கொம்பினை “அறு மருப்பு” எனவும், முளைக்கும் கொம்பினை “மறு மருப்பு” எனவும் பெயரிட்டு அழைத்தனர்
யானைக் கொம்பு
யானை தன் கொம்பால் புலியினைக் கொன்று பின்பு தனது கொம்பையும் உடலையும் கழுவுவதைக் கண்டுள்ளனர்.இது காட்டு யானைகளின் செயல்களில் ஒன்றாகும்.இதனை
“உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் நெடுவகிர் விழுப்புண் கழா அக்கங்குல்” (அகம் 308)
“இரும்புலி தொலைத்த பெருங்கை வேழ்த்துப் புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்குல் அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு” (அகம் 272)
இந்த அரிய செயலை கண்டுணர்ந்து சங்கப்புலவர்கள் பாடியிருப்பது வியப்பிற்குரியது.
மயில்
மயிலிற்கு காட்டு விலங்குகளை ஊடுருவிப் பார்ப்பது போல உற்றுப் பார்க்கும் குணம் உண்டு என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதனை உணர்ந்த சங்கப்புலவர்கள் மயிலின் கண்ணினை “போழ்கண்” என்று கூறினர்.
“கையற வந்த பையுண் மாலை பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை நனந்தலை புலம்பக் கூஉந் தோழி பெரும்பே தையவே” (குறு 391)
போழ் என்ற சொல்லிற்கு பிளவுபடுதுல், ஊடுருவிச் செல்லுதல் என்ற பொருள்கள் உண்டு. மயிலின் பார்வை ஊடுருவிச் செல்லுதல் போல இருப்பதால் போழ்கண் என்றனர்.இந்த குணத்தால் மயிலானது சிறுத்தைப்புலி போன்ற விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்கின்றன. மாரிக் காலத்தில் மயில்கள் ஆடும் என்பதனை
“மடவ வாழி மஞ்ஞை மாயினம மாரி பெய்தென அதனெதிர் ஆலலும் ஆலின” (குறுந் 251)
குறிஞ்சி நிலத்தில் மயில்கள் மகிழ்ந்து ஆட அதற்கு ஏற்ப பேராந்தைகள் மாறிமாறி அலற்றின என்று கூறுகின்றனர்.
“மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் குறுகல் அடுக்கத்ததுவே”
நாரையின் தூவி
நாரையினப் பறவைகளுக்கு மார்புப் பக்கத்திலும், பின்பக்கத்திலும் உள்ள இறகுகளில் மிகச் சிறிய, நுண்ணிய துய் போன்ற தூவிகள் காணப்படுகின்றன. அவற்றிலிருந்து ஒருவகையானத் தூள் போன்ற பொருள் வெளிப்படுகின்றது. ஆதன் மூலம் நாரை தனது இறகுகளை உலர்த்திக் கொள்ளும் வழக்கத்தினைக் கொண்டுள்ளது எனபதனை
“ஆடமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன
தோடமை தூவித் தடந்தாள் நாரை” (நற்றி 178)
மூங்கிலுள்ளே உரிக்கப்படும் தோலினை மெல்லியதாகப் பிசைந்தது போல தூவியை உடைய நாரை என்று கூறியிருப்பது சங்கப்புலவர்களின் அறிவாற்றைக் காட்டுகின்றது.
பருந்து
பாலை நிலத்தின் வெயிலில் பருந்து தலை உலர்த்துதலை
“உலறு தலைப் பருந்தின் உளி வாய்ப் பேடை அலறு தலை ஒமை அம் கவட்டு” (ஆம் 321)
ஓமை மரத்தில் பருந்துகள் வாழும் என்பதை உணர்ந்து கூறுகின்றார்.
“கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினைக் கடியுடை நனந்தலை ஈன்று இளைப்பட்ட” (அகம் 3)
நண்டு
நண்டு ஆம்பலின் தண்டை தன் கூரிய உகிரால் அறுத்துத் தனக்குரியதான அடைகரையின் கண் வாழும் தன்மையுடையது நண்டு கூரிய உகிருடையது, என்பதை கொடுத்தாள் அளைவாழ் அலவன் கூருகிர் (குறுந் 351)குறுந்தொகைப் பாடல் வழி அறியலாம்.
நண்டு கருவுயிர்ந்தவுடனே இறந்துவிடும் இயல்புடையது அதன் இறப்பிற்கு அதன் குஞ்சுகளே காரணமாக அமைகின்றது. என்பதை உணர்ந்து சங்க புலவர்கள் பாடியிருப்பது அவர்களது அறிவுத்திறத்திற்குச் சான்றாகும்.
“தாய் சாப்பிறக்கும் புள்ளிகளவனொடு பிள்ளை தின்னும் முதலைத்து (ஜங்-24)
கருவண்டு
மலரின் அழகினாலும் மணத்தாலும் ஈர்க்கப்பட்ட வண்டு வரிகளின் வழியே சென்று தேனை அருந்தித் திரும்புகின்றன. அப்போது அதன் உடல் பொன்னிறமாகக் காணப்படுகிறது.
“அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன செவ்வரி யிதழ் சேன் நாறு பிடவின்
நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப் பொன் உரை கல்லின் நல்நிறம் பெறூஉம்” (நற்றி 25)
ஆம்பல் போன்ற சில நீர்வாழ் செடிகள் இரவில் மலரும் வழக்க முடையன இரவில் மலரும் பூக்கள் பார்வைக்கு படும்படி பெரிதாகவும் வெண்மையாகவும், மணமுடையதாகவும் இருக்குமென தாவர நூலார் கூறுவர். இவ்வாரு இருப்பதால் நடுநாளில் தும்பி(வண்டு) மலரை மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்துவதை.
“என்னை மார்பில் புண்ணும் வெய்ய நடுநாள் வந்து தும்பியுந் துவைக்கும்” (புறம் 280)
ஆம்பல் மலரை நடுயாமத்தில் வண்டு அடைவதாகச் சொல்லப்பட்டிருப்பது அறிவியல் நோக்காகும்.
பூச்சிகளால் ஏற்படும் மகரந்தச் சேர்க்கையை ‘நுவெழஅழிhலடைல’ என்று தாவரநூலார் கூறுவர். ஆனால் பறவைகளால் ஏற்படும் மகரந்தச்சேர்க்கையை ‘ணுழழிhடைல’ என்று அழைப்பர்; பறவைகளால் ஏற்படும் இந்த மகரந்தச் சேர்க்கையை அகநானூற்றுப்பாடல்
“பாசரும் ஈன்ற செம்மூகை முருக்கினப் போது அவிழ் அலரி கொழுதித் தாது அருந்து அம்தளிர் மாஅத்து அலங்கண் மீமிசை” (அகம் 229)
குயில் முருக்கமலரைத் துருவித்தாதை உண்பதாகக் கூறப்பட்டுள்ளது. குயிலின் மூக்கில் மகரந்தம் ஒட்டிக் கொள்வது இயல்பு. அதனால் மகரந்த சேர்க்கை பிறிதொரு பூவை குயில் நாடும் போது ஏற்படுவது இயற்கை இதனை உணர்ந்து சங்கப்புலவர்கள் பாடியிருப்பது அறிவியலாகும்.
சங்க இலக்கியங்கள் பல நுண்ணிய அறிவியல் செய்திகளை எடுத்துரைக்கின்றன.காட்டில் புலியைக் கண்ட முசுக்குரங்குகள் எப்படிக் கூக்குரலிட்டு அழைக்கின்றன. தான் கொன்ற விலங்கின் தசையை புலி எப்படி மறைத்து வைக்கின்றது. கரடி ஈயற்புற்றில் எப்படி வாயினை வைத்து உறிஞ்சி உண்ணுகிறது. காட்டுப் பன்றியின் அஞ்சாத செயல் திறமை என பல அறிய இயற்கை உண்மைகளை அறியலோடு கூறியுள்ளன.
முடிவுரை:-
சங்கப் புலவர்கள் மரம், செடி, கொடிகள், விலங்குள் பறவைகள் ஆகிய உயிர்களைக் கண்டு அவற்றின் உருவம், குணம், தோற்றம், செயல்கள் பற்றிய செய்திகள் ஆராய்ந்தே கூறியுள்ளனர் எனவே இலக்கியத்தில் அறிவியலையும் கலந்து பாடியுள்ளனர் என்பதை அறியலாம்